ரங்கசாமிக்கு எதிராக வேட்பாளர் கிடைக்காததால் ஏனாமில் காங்கிரஸ் போட்டியிடவில்லை

புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

மொத்தமுள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலைசிறுத்தைகள் தலா ஒரு தொகுதி பிரித்துக் கொண்டன.

இதில் காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் ஏனாம் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மனுதாக்கல் இறுதி நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என காங்கிரசார் காத்திருந்தனர். ஆனால் கட்சித்தலைமை யாரையும் அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் சார்பிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கூட்டணி தொகுதி பங்கீட்டில் 15 தொகுதி பெற்றாலும், காங்கிரஸ் 14 தொகுதியில்தான் போட்டியிடுகிறது. வெளியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வருபவர்களுக்கு சீட் வழங்கியதால்தான் கட்சி சரிவை சந்தித்தது. இது புதுச்சேரி காங்கிரஸ் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஏனாமில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லாடி கிருஷ்ணாராவுக்கு காங்கிரஸ் அமைச்சர் பதவி அளித்தது. அதன்பின் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மல்லாடி ஆதரவாளர்களாக மாறினர். அவர் தற்போது என்.ஆர்.காங்கிரசுக்கு சென்று விட்டார்.

இதனால் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் கூடாரம் மொத்தமாக காலியாகி விட்டது. தேர்தலில் போட்டியிட வேட்பாளர் யாரும் இல்லை. இதனால் ஏனாம் தொகுதியில் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் கட்சி கடைசிநேரத்தில் கைவிட்டுள்ளது.