புதுவையில் 24-ந்தேதி கொரோனா தடுப்பூசி முகாம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் | Corona vaccination camp on 24th March in Pondicherry

கொரோனாவை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் 2-வது அலை உருவாகி விடும், எனவே மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதையடுத்து புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 61 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருமாம்பாக்கம் மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரியில் நாளை மறுநாள் (புதன் கிழமை) பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அன்று காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த முகாம் நடைபெறும். முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட தொடர் நோய் உள்ளவர்கள் ஆதார் அட்டை கொண்டுவந்தால் போதும் அங்கேயே பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது குறித்து புதுவை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வராமல் தடுக்கும். ஒருவேளை தொற்று வந்தால் கூட வீரியமாக இருக்காது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
புதுவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்போர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.