புதுச்சேரியில் ஒரே நாளில் 4818 பேருக்கு கொரோனா தடுப்பூசி | Puducherry records 4818 vaccinations in single day

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 4818 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப் படுத்தி உள்ளது.கடந்த ஜன. 16ம் தேதி முதல், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.கடந்த 1ம் தேதி முதல் 60 வயது மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் வரை 50,265 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த, நேற்று பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரியில் தடுப்பூசி செலுத்தும் முகாம், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடந்தது.

இதுதவிர, கதிர்காமம் மருத்துவ கல்லுாரி, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.நேற்று ஒரே நாளில் சுகாதார பணியாளர்கள் 1249 பேர், முன்கள பணியாளர்கள் 1241, 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 904 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட 1424 பேர் என மொத்தம் 4818 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இதுவரை புதுச்சேரியில் 55,083 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.